Friday, November 27, 2009

எலிக்குப் பதிலாக ஏழை


pharma6குழந்தைகளுக்கான மருந்துகள் அமெரிக்காவில் விற்பனைக்கு வருவதற்கு முன் ஆபிரிக்காவில் குழந்தைகளில் ஆபத்தானதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது.

மேற்குநாடுகளில் செல்வந்த நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கு முன்னர் குறிப்பிட்ட மருந்துகள் இந்தியாவிலும், பெருவிலும் ஏழைகளில் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் கடும் நோயாளிகளாக்கப்படுகிறார்கள் அல்லது உயிர் பறிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக எலியில் பரிசோதனைகள் நடாத்தப்படுவது அனைவருக்குமே தெரிந்த விடயம். ஆனால் எலிகளுக்குப் பதிலாக ஏழைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை எத்தனை பேர் அறிந்திருக்கிறோம் என்பது கேள்வியே.

மனிதருக்கு வரும் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்து முதலில் எலி பின்னர் குரங்கு என்று படிப்படியாக மனிதரை அண்மிய விலங்குகளில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக அநுமதிக்கப்பட்ட/ ஆபத்தற்றதென்று கணிக்கப்படும் மருந்துகள் அவை பற்றிய விளக்கத்தின் பின், தாமாக முன்வரும் மனிதர்களில் பரிசோதிக்கப்படுகிறது. இறுதியாக விற்பனைக்கு வருகிறது.

இவை மருந்து தயாரிப்புத் தொடர்பான அறியப்பட்ட நடைமுறைகள். ஆனால் மனிதரில் சோதைனை செய்யப்படுவதற்கு அநுமதி மறுக்கப்பட்ட/ ஆபத்தானது என்று அறியப்பட்ட மருந்துகள் அவை பற்றிய எந்த விளக்கங்களும்/ அநுமதியும் இன்றி மனிதர்களில் பரீட்சிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. இது பற்றிய ஊகங்கள் இதுவரை வெளியிடப்பட்ட போதும், இப்போது சுவீடன் வானொலியொன்று ஆதாரங்களுடன் இந்தப் பயங்கரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இது தனியே ஒரு குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தினது பயங்கரம் மட்டுமல்ல, பொதுவாக பெரிய மருந்து நிறுவனங்கள் அனைத்தையும் பற்றியதுதான்.

pharma1Astra-Zeneca என்ற இங்கிலாந்து-சுவீடன் நாடுகளின் மருந்து நிறுவனம் Schizophrenia என்ற நோயை Seroquel என்ற மருந்து எவ்வளவு காலத்திற்கு திரும்ப வரவிடாமல் தடுக்கும் என்று அறிய விரும்பியது. 2005-2007 வரை இதற்காக 327 நோயாளிகள் இந்தியா, உக்ரெய்ன், ரஷ்யாவிலிருக்கும் 26 பரிசோதனை முகாம்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களது நோய்க்கு இதுவரை கொடுக்கப்பட்ட மருந்து அவர்களுக்குத் தெரியாமலே நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட மருந்துக்குப் பதிலாக Astra-Zeneca மருந்து நிறுவனம் பரிசோதிக்க விரும்பிய Seroquel மருந்து செலுத்தப்பட்டது. இந்த நோயாளிகளுக்கு Schizophrenia நோய் திரும்ப முழு அளவில் தாக்கும்வரை இந்தப் பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது. 327 நோயாளிகளுக்கும் இந் நோய் திரும்பத் தாக்கியதில், 36 பேர் நிரந்தர நோயாளியானார்கள். நோயின் கடுமை தாங்க முடியாமல் ஒரு நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.

நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த வழமையான மருந்து நிறுத்தப்பட்டதும், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று அறியப்பட்ட மருந்தை அவர்களுக்கு கொடுத்ததும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சுவீடன் Goteborg பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Christian Munthe என்ற விரிவுரையாளர் உட்பட உலகமெங்குமிலிருந்தும் பல அறிஞர்கள் கண்டித்தார்கள்/எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

pharma5இந்தப் பரிசோதனையத் தங்கள் நாட்டு நோயாளிகள் மீது மேற்கொள்வதற்கு இந்தியா, உக்ரெய்ன், ரஷ்யா நாடுகள் அனுமதியளித்தன என்று Astra-Zeneca நிறுவனம் திமிராகப் பதிலளித்தது. இங்கேதான் பிரச்சினையே இருக்கிறது. ஆபத்தானது என்று இந்த மருந்தை மனிதர்களில் பரிசோதிப்பதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பு தடை விதித்திருந்தது. அப்படியிருந்தும் இலஞ்சம், ஊழல் நிறைந்த நாடுகளின் அதிகாரிகள்/ அரசியல்வாதிகள் விலைக்கு வாங்கப்பட்டு, ஏழை நோயாளிகளில் பரிசோதனை நடாத்தப்பட்டது. இந்த மருந்து நிறுவனம் திட்டமிட்டே இந்த நாடுகளைத் தெரிவு செய்ததுடன், மனிதருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் நன்கு அறிந்தே மருந்துப் பரிசோதனையை வெற்றிகரமாக நடாத்தி முடித்தது.

Shell, Esso….. போன்ற இன்னும் பல எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் கோடிக் கணக்கில் காசு கறப்பதும், ஈராக், அப்கானிஸ்தான் போர்களில் முக்கிய பங்கு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. எரிபொருளுக்கு அடுத்தபடியாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே கோடிக் கணக்கில் பணத்தைக் கறக்கின்றன. ஆபிரிக்காவில் எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று வருடாவருடம் அமெரிக்கா/ ஐரோப்பிய நாடுகள் நிறைய பணம் செலவழித்து ஆடம்பரக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆபிரிக்காவின் வறிய மக்கள் நோய்க்குரிய மருந்தை வாங்க முடியாதளவுக்கு அதன் விலை வானம் வரை உயர்ந்திருப்பது குறித்து கூச்சல் போடும் இந்த நாடுகளுக்கு கொஞ்சமும் கூச்சமில்லை.

இங்கேதான் அடுத்த கொடுமை தெரிகிறது. ஈவிரக்கமமற்ற அரசியல்வாதிகளால் கைநிறையப் பணம் வாங்கிக் கொண்டு பலிக்கடாக்களாக விற்கப்பட்டும் ஏழை மக்கள தம்மில் பரிசோதிக்கப்படும் ஆபத்தான மருந்துகளை வாங்கக் காசில்லாமல், வெறும் பரிசோதனைக்கூடங்களாய் நோய்வாய்ப்பட்டு பரிதாபமாக செத்துப் போகிறார்கள்.

pharma3பெரும்பாலான மருந்துகளைப் போலவே தங்களில் பரிசோதிக்கப்படும் மருந்துகளைக் கூட இந்த வறிய மக்களால் வாங்க முடிவதில்லை.

2008 இல் திரும்பவும் தென்னமெரிக்கா, ஆசியா. கிழக்கைரோப்பா நாடுகளிலிருந்து ஏழை நோயாளிகள் தெரிவு செய்யப்பட்டு, மருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. வெற்றிகரகமாகப் பரிசோதிக்கப்ப்பட இந்த மருந்துகளை வாங்கியவர்கள் 86% மேற்கைரோப்பா, அமெரிக்கா, யப்பானைச் சேர்ந்த செல்வந்த நோயாளர்கள்.

அப்படியானால் இந்த மருந்துகளை வாங்கிய மிகுதி 14% யார்?

வேறு யாராக இருக்கும்!

தமது நாட்டுமக்களை பரிசோதனைக் கூடங்களாக்கி சாகடிக்கும் வறியநாடுகளின் அரசுகளும் அவர்களை அண்டிய அதிகார கும்பல்களும் தான் !!

Thursday, November 19, 2009

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்

1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.

4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.

5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.

9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்

11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் – நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.

12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் – பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.

13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் – இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.

14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் – எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.

16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் – சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.

17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.

19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.

22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.

23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் – குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.

25) அச்சம் தவிருங்கள்.

26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.

27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.

28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.

29) வெற்றி என்பது பணத்தினாலோ, பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.

30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள்

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழந்தாலும் கீழ் காணும் எளிய முறைகளை பின்பற்றினால் இலட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.

* ஆடைஉங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை அணியலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாகா இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கபடுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகலுக்கு உண்டு. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்

* வேக நடை அட வேக நடை என்ன ஆக போகிறது என்று தானே நினைக்க போறிங்க?? ஒருவரது நடையை வைத்தே அவர் சோம்பேரியா இல்லை தெம்பானவரா என்பதை அறியலாம். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு இவரால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே உங்கள் வழமையான நடையில் இன்னும் 25% அதிகமாக்குங்கள்.

* நிமிர்ந்த நிலை எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கவிட்ட படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது , தலையை தொங்கப்போடமால் இருப்பது, எதிரில் உள்ள்வர்களின் கண்களை நேரே பார்ப்பது, பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணங்களாகும். பார்ப்பவர்க்கு நாம் தன்னம்பிக்கை உடையவர் என்ர உணர்வை உண்டாக்கும்.

* கேட்பது நல்ல விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 – 60 நொடிக்குள் உங்களது இலட்சியம் மற்றும் எதிர்காலம் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சத்தமாக பேசி பழகுங்கள். அல்லது எப்பொழுது தன்னம்பிக்கையை தூண்ட வேன்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லி பாருஙள்.

* நன்றி உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள்.அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போதுதான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புக்கள் மற்றும் தன்னம்பிக்கை உண்டாக்ககூடிய விஷயங்களை நம் வாழ்வில் நடந்து உள்ளன என தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ வழி வகுக்கும்.

* மனதார பாராட்டுங்கள் - நம்மை நாமே “நெகட்டிவ்” ஆக நினைக்கும்போது மற்ற்வர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ் ஆக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்ட கற்று கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் பெரிதாக பாராட்டுங்கள். மற்றவர்கள் பற்றி குறை கூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்து போகும்.. இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

* முன்னால் உட்காருங்கள் மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை பார்க்கும்போது நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங்களும் தானே வெளிவரும். பாடசாலை, பொது விழாக்கள், மற்றும் கூட்டங்களில் அமரும்போது எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே இனிமேல் எங்கு சென்றாலும் முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். மனதில் உல்ல பயம் போய் நம்பிக்கை அதிகரிக்கும்.

* பேசுங்கள்சிலர், பலர் கூடி இருக்கும்போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான். இனி பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்து பேசுங்கள். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்கள் உங்களை தலைவர்களாக ஏற்று கொள்வர். எல்லோரிடத்திலும் தரியமாக பேசினாலே தன்னம்பிக்கை உங்களை தேடி வரும்.

* உடல்வாகு - நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீது நமக்கே நம்பிக்கை இழக்க நேரிடும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்து கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாகும்.

* நாடு நாடென்ன செய்தது நமக்கு, என கேள்விகள் கேட்பது எதற்கு?? நாம் என்ன செய்தோம் அதற்கு என்று நினைத்தால் நன்மை நமக்கே..! நம்மை பற்றியே எப்போதும் சிந்திக்க கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்களையும் சமுதாயத்தையும் பற்றியும் சிந்திக்க வேண்டும். “கடமையை செய் பலனை எதிர்பாராதே” இது நாவுக்கரசரின் அழகிய வரிகள். எனவே பிறருக்காகவும் வாழ பழகுவோம்..!

இந்த தன்னம்பிக்கை நமது எல்ல திறனையும் வெளிக்காட்ட உதவும்.இவற்றை நாளைக்கு நாளைக்கு என தள்ளி போடமல் இன்றே முடிவு செய்து தொடங்குங்கள். இனி வெற்றி உங்கள் பக்கமே..