Friday, November 27, 2009

எலிக்குப் பதிலாக ஏழை


pharma6குழந்தைகளுக்கான மருந்துகள் அமெரிக்காவில் விற்பனைக்கு வருவதற்கு முன் ஆபிரிக்காவில் குழந்தைகளில் ஆபத்தானதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது.

மேற்குநாடுகளில் செல்வந்த நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கு முன்னர் குறிப்பிட்ட மருந்துகள் இந்தியாவிலும், பெருவிலும் ஏழைகளில் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் கடும் நோயாளிகளாக்கப்படுகிறார்கள் அல்லது உயிர் பறிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக எலியில் பரிசோதனைகள் நடாத்தப்படுவது அனைவருக்குமே தெரிந்த விடயம். ஆனால் எலிகளுக்குப் பதிலாக ஏழைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை எத்தனை பேர் அறிந்திருக்கிறோம் என்பது கேள்வியே.

மனிதருக்கு வரும் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்து முதலில் எலி பின்னர் குரங்கு என்று படிப்படியாக மனிதரை அண்மிய விலங்குகளில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக அநுமதிக்கப்பட்ட/ ஆபத்தற்றதென்று கணிக்கப்படும் மருந்துகள் அவை பற்றிய விளக்கத்தின் பின், தாமாக முன்வரும் மனிதர்களில் பரிசோதிக்கப்படுகிறது. இறுதியாக விற்பனைக்கு வருகிறது.

இவை மருந்து தயாரிப்புத் தொடர்பான அறியப்பட்ட நடைமுறைகள். ஆனால் மனிதரில் சோதைனை செய்யப்படுவதற்கு அநுமதி மறுக்கப்பட்ட/ ஆபத்தானது என்று அறியப்பட்ட மருந்துகள் அவை பற்றிய எந்த விளக்கங்களும்/ அநுமதியும் இன்றி மனிதர்களில் பரீட்சிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. இது பற்றிய ஊகங்கள் இதுவரை வெளியிடப்பட்ட போதும், இப்போது சுவீடன் வானொலியொன்று ஆதாரங்களுடன் இந்தப் பயங்கரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இது தனியே ஒரு குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தினது பயங்கரம் மட்டுமல்ல, பொதுவாக பெரிய மருந்து நிறுவனங்கள் அனைத்தையும் பற்றியதுதான்.

pharma1Astra-Zeneca என்ற இங்கிலாந்து-சுவீடன் நாடுகளின் மருந்து நிறுவனம் Schizophrenia என்ற நோயை Seroquel என்ற மருந்து எவ்வளவு காலத்திற்கு திரும்ப வரவிடாமல் தடுக்கும் என்று அறிய விரும்பியது. 2005-2007 வரை இதற்காக 327 நோயாளிகள் இந்தியா, உக்ரெய்ன், ரஷ்யாவிலிருக்கும் 26 பரிசோதனை முகாம்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களது நோய்க்கு இதுவரை கொடுக்கப்பட்ட மருந்து அவர்களுக்குத் தெரியாமலே நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட மருந்துக்குப் பதிலாக Astra-Zeneca மருந்து நிறுவனம் பரிசோதிக்க விரும்பிய Seroquel மருந்து செலுத்தப்பட்டது. இந்த நோயாளிகளுக்கு Schizophrenia நோய் திரும்ப முழு அளவில் தாக்கும்வரை இந்தப் பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது. 327 நோயாளிகளுக்கும் இந் நோய் திரும்பத் தாக்கியதில், 36 பேர் நிரந்தர நோயாளியானார்கள். நோயின் கடுமை தாங்க முடியாமல் ஒரு நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.

நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த வழமையான மருந்து நிறுத்தப்பட்டதும், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று அறியப்பட்ட மருந்தை அவர்களுக்கு கொடுத்ததும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சுவீடன் Goteborg பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Christian Munthe என்ற விரிவுரையாளர் உட்பட உலகமெங்குமிலிருந்தும் பல அறிஞர்கள் கண்டித்தார்கள்/எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

pharma5இந்தப் பரிசோதனையத் தங்கள் நாட்டு நோயாளிகள் மீது மேற்கொள்வதற்கு இந்தியா, உக்ரெய்ன், ரஷ்யா நாடுகள் அனுமதியளித்தன என்று Astra-Zeneca நிறுவனம் திமிராகப் பதிலளித்தது. இங்கேதான் பிரச்சினையே இருக்கிறது. ஆபத்தானது என்று இந்த மருந்தை மனிதர்களில் பரிசோதிப்பதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பு தடை விதித்திருந்தது. அப்படியிருந்தும் இலஞ்சம், ஊழல் நிறைந்த நாடுகளின் அதிகாரிகள்/ அரசியல்வாதிகள் விலைக்கு வாங்கப்பட்டு, ஏழை நோயாளிகளில் பரிசோதனை நடாத்தப்பட்டது. இந்த மருந்து நிறுவனம் திட்டமிட்டே இந்த நாடுகளைத் தெரிவு செய்ததுடன், மனிதருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் நன்கு அறிந்தே மருந்துப் பரிசோதனையை வெற்றிகரமாக நடாத்தி முடித்தது.

Shell, Esso….. போன்ற இன்னும் பல எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் கோடிக் கணக்கில் காசு கறப்பதும், ஈராக், அப்கானிஸ்தான் போர்களில் முக்கிய பங்கு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. எரிபொருளுக்கு அடுத்தபடியாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே கோடிக் கணக்கில் பணத்தைக் கறக்கின்றன. ஆபிரிக்காவில் எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று வருடாவருடம் அமெரிக்கா/ ஐரோப்பிய நாடுகள் நிறைய பணம் செலவழித்து ஆடம்பரக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆபிரிக்காவின் வறிய மக்கள் நோய்க்குரிய மருந்தை வாங்க முடியாதளவுக்கு அதன் விலை வானம் வரை உயர்ந்திருப்பது குறித்து கூச்சல் போடும் இந்த நாடுகளுக்கு கொஞ்சமும் கூச்சமில்லை.

இங்கேதான் அடுத்த கொடுமை தெரிகிறது. ஈவிரக்கமமற்ற அரசியல்வாதிகளால் கைநிறையப் பணம் வாங்கிக் கொண்டு பலிக்கடாக்களாக விற்கப்பட்டும் ஏழை மக்கள தம்மில் பரிசோதிக்கப்படும் ஆபத்தான மருந்துகளை வாங்கக் காசில்லாமல், வெறும் பரிசோதனைக்கூடங்களாய் நோய்வாய்ப்பட்டு பரிதாபமாக செத்துப் போகிறார்கள்.

pharma3பெரும்பாலான மருந்துகளைப் போலவே தங்களில் பரிசோதிக்கப்படும் மருந்துகளைக் கூட இந்த வறிய மக்களால் வாங்க முடிவதில்லை.

2008 இல் திரும்பவும் தென்னமெரிக்கா, ஆசியா. கிழக்கைரோப்பா நாடுகளிலிருந்து ஏழை நோயாளிகள் தெரிவு செய்யப்பட்டு, மருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. வெற்றிகரகமாகப் பரிசோதிக்கப்ப்பட இந்த மருந்துகளை வாங்கியவர்கள் 86% மேற்கைரோப்பா, அமெரிக்கா, யப்பானைச் சேர்ந்த செல்வந்த நோயாளர்கள்.

அப்படியானால் இந்த மருந்துகளை வாங்கிய மிகுதி 14% யார்?

வேறு யாராக இருக்கும்!

தமது நாட்டுமக்களை பரிசோதனைக் கூடங்களாக்கி சாகடிக்கும் வறியநாடுகளின் அரசுகளும் அவர்களை அண்டிய அதிகார கும்பல்களும் தான் !!

No comments: