Thursday, August 30, 2007

'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்

மனிதப்பிறவி மகத்தான ஒன்று. இதற்கு உதாரணம் இரண்டு. ஒன்று சிரிப்பு, இன்னொன்று கனவு. கனவென்பது நம் ஆழ்மனது எண்ணங்களின் வெளிப்பாடு. அது வெறும் நிழல், நிஜமல்ல. ஆனால் கனவுகளை நனவாக்க இயலுமா? முயன்றால் முடியாதது உண்டா?நீங்கள் உங்களுடைய ஆசைகளை, கனவுகளை, லட்சியங்களை முதலில் எழுதுங்கள்!


1. அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி

2. நடக்கும், நடக்காது என்றெல்லாம் யோசிக்கவே கூடாது

3. இன்று இரவே இந்திய ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பில்கேட்ஸ் ஆகவேண்டும் என்று நினைத்தால்கூடத் தவறில்லை

4. என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே எழுதுங்கள்

5. எழுதிவிட்டீர்களா?

இனிப் பாருங்கள் மனித மனத்தின் மகத்துவத்தை!நினைப்பதைப் பெரிதாகவே நினைத்து வையுங்கள். அது பேராசை என்று பிதற்றுபவர்கள், சத்தியமாகப் பித்தர்கள் என்று ஒரு புறம் ஒதுக்கித் தள்ளுங்கள். "உனது குறிக்கோள் வானத்தை நோக்கி இருக்கட்டும், அப்போதுதான் நீ மர உச்சியையாவது அடைவாய், அதை விடுத்து உன் குறிக்கோளே மர உச்சிதான் என்றால் தரையைவிட்டுக் கிளம்புவதிலேயே தடுமாற்றம் ஏற்படும்" காஞ்சிப்பெரியவர் தெய்வத்தின் குரலில் சொன்னது. அதனால்தான் நமது முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் நம்மைக் "கனவு காணுங்கள்" என்றார். "கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதாக மட்டும் இருக்கக்கூடாது, உன்னைத் தூங்கவிடாமல் செய்வதாகவும் இருக்கவேண்டும்" என்பதற்காகவே அப்படிச் சொன்னார். நீங்கள் வாழும் வாழ்க்கை உங்களுடையது, நீங்கள் பயணிக்கும் பாதை உங்களுடையது, லட்சியம் உங்களுடையது, குறிக்கோள் உங்களுடையது, காணும் கனவு உங்களுடையது. பிறகென்ன? மற்றவைகளை உதறித்தள்ளுங்கள். "ஆயிரம் மைல்கள் கடந்த ஒரு பயணம் நீ எடுத்துவைக்கும் முதல் அடியில்தான் தொடங்குகிறது" என்றொரு பொன்மொழி உண்டு. அருட்தந்தை ராபர்ட் ஷ்யூலர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரின் ஒரு பெரிய கனவு என்ன தெரியுமா? அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சலீஸுக்கு அருகில் சான்டா ஆனா என்றொரு நகரம் இருக்கிறது. அந்தப்பகுதி வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் இவற்றால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும். அங்கு ராபர்ட் ஷ்யூலர் அவர்கள் முழுக்க முழுக்க கண்ணாடியாலான ஒரு பேராலயத்தைக் கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டார். உடனே ஒரு தேர்ந்த நிபுணரை வரவழைத்து ஆலோசிக்கும்போது, அந்த நிபுணர், சற்று கேலியாகவும், கிண்டலாகவும், ஆச்சர்யத்தோடும் "இதற்கு அதிகச் செலவாகும், தங்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா?" எனக்கேட்க, அருட்தந்தை ‘அவ்வளவு பணம் இல்லை’ எனக்கூறிவிட்டார். ‘தேவாலயம் கட்டமுடியாது’ எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டு அந்த நிபுணர் சென்று விட்டார். ஆனால் தந்தை ராபர்ட் மனதில் அந்தக் கனவு மறையவே இல்லை. அந்தத் தேவாலயத்தைக் கட்டிமுடித்து 1980-ல் இந்த உலகத்துக்கு ‘நமது கனவை நனவாக்க முடியும்’ என்று நிரூபித்துவிட்டார். வெறுமனே அல்ல, உலகத்திலேயே மிகப்பெரிய கண்ணாடியாலான ஒரு தேவாலயம் என்ற கூடுதல் சிறப்போடு சாதித்துக் காட்டினார். இன்றும் ஒவ்வொரு ஞாயிறன்றும் பெரிய பெரிய பிரபலங்கள் அங்கு வந்து சொற்பொழிவாற்றுவதோடு, "ஹவர் ஆப் பவர்" (Hour of Power) என்ற அந்த ஜெபம் உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்கச் செம்மல் நெல்சன் மண்டேலா அவர்களின் 1994 சொற்பொழிவு சிறப்பான ஒன்று. "நாம் இயலாதவர்கள் என்பதால் நான் பயப்படவில்லை, நம்மால் எதுவும் இயலும் என்பதால்தான் பயப்படுகிறேன்". என்ன ஒரு நெருப்புத் தெறிக்கும் வாக்கியம்! உங்கள் கேள்விகள், "நான் அறிவாளியா? தகுதியானவனா? என்னால் முடியுமா?" என்பவை அல்ல. "நான் ஏன் அறிவாளியாக இருக்கக் கூடாது? நான் ஏன் தகுதியானவனாக இருக்கக்கூடாது? என்னால் ஏன் முடியாது?" என்பவைதான். நம் கையிலுள்ள தீப்பொறி வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால் பற்றப்போவது பிரபஞ்ச நெருப்பு. இந்தப்பொறி உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. தீப்பந்தத்தை ஏந்திப்பிடிக்கக் கற்றுக்கொண்டால், மற்றதை அது முடித்துவைக்கும். இந்தப் பூமியில் மனிதராகப் பிறந்தது எதற்காகவோ குறைந்தபட்சம் அதைச் செய்தாலே நாம் எட்ட நினைக்காத லட்சியத்தை எட்டமுடியும். ஒரு செயலைத் திரும்பத் திரும்ப நாம் தவறாகச் செய்தாலும் அது ஒவ்வொரு முறையும் புதுப் புது உத்திகளைத் தரும். "தோல்வி மூலம் நாம் பெறப்போகும் உத்திகளுக்காகவேனும் மனிதன் தோல்வியுறவேண்டும்" . முதலில் நமக்கு நாமே போட்டுக்கொண்ட வட்டத்தை விட்டு வெளியே வருவோம். இந்த உலகத்தில் மனித சாதனைகளுக்கு மட்டும் எல்லையே இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் குழந்தைகளாக இருக்கும்பொழுது பல எட்டமுடியாத கற்பனைகளைச் செய்வதுண்டு. நாம் வளர வளர நமது கற்பனைகள் தேய்ந்துவிடுகின்றன. நாம் எப்படி நமது மூளைக்குப் பயிற்சி கொடுக்கிறோமோ அதனை அது அப்படியே செய்யும். உங்களைக் கனவு காணச் சொல்வது, கற்பனை செய்யச் சொல்வது உங்களின் மூளைக்கு நாம் கொடுக்கும் பயிற்சியே தவிர வேறொன்றுமில்லை. நீஙகள் என்னவாக விரும்புகிறீர்களோ, அதனை எழுதி வையுங்கள், மனதில் அதை மட்டுமே நினைத்து உங்கள் பயணத்தைத் தொடருங்கள், காலை எழுந்ததும், இரவு உறங்கு முன்பும் நீங்கள் உங்கள் ஆசையை, கற்பனையை நினைத்துப் பாருங்கள், சொல்லிப்பாருங்கள். நீங்களே ஆச்சர்யப்படும்படி ஒருநாள் ஆகியிருப்பீர்கள். இன்று வெற்றி நடைபோடும் சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் செய்த பயிற்சிதான் இது. அவர்களுக்கும் நமக்கும் ஏன் ஒவ்வொருவருக்கும் இருப்பது அதே மூளைதான், அதே நேரம்தான், அதே உணர்வுகள்தான். அவர்களால் முடியும்பொழுது ஏன் நம்மால் முடியாது? முடியும். மூளைக்குப் பயிற்சி மட்டும் கொடுத்தால் நிச்சயமாக முடியும். உங்கள் மூளை, நீங்கள் அடையப்போகும் வெற்றியை மட்டுமே பார்க்கட்டும்."ஏன் என்பது பலப்படும்போது, எப்படி என்பது சுலபமாகிவிடும்".
புரியும்படி சொல்கிறேன். ஏன் நம்மால் முடியாது என்று நினையுங்கள். எப்படி முடியும் என்பதை உங்கள் மூளை சொல்லும். எனவே மூளை சொல்லவேண்டும் என்றால் அதற்குப் பயிற்சி தேவை, பயிற்சிக்கு கனவு, கற்பனை, லட்சியம், குறிக்கோள் தேவை. உங்கள் எண்ணம் எப்போதும் இலக்கை மட்டுமே பார்க்கவேண்டும். ஒருவேளை நாம் தோற்றுவிட்டால்? என்று நினைக்காதீர்கள்! நாம் ஜெயித்துவிட்டால்! என்று நினைத்துப் பாருங்கள்! இதுவரை நாம் நம்மைப்பற்றிக் கனவு கண்டிருக்கிறோமா? நமது வாழ்க்கையில் வெற்றி அடைவதைப்பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறோமா? நான் இப்படி ஆகவேண்டும் என்று யோசித்திருக்கிறோமா? இது உங்கள் வாழ்க்கை, உங்கள் லட்சியம், உங்கள் கனவு, உங்கள் இலக்கு! இதில் நீங்கள்தான் ஹீரோ. தூரம் அதிகமில்லை! சாதிக்க ஏது எல்லை! வாழ்த்துக்கள்!!

No comments: