உடைந்த கண்ணாடியில்
முகம் பார்க்கப் பழகிக் கொள்.
அதில்
உன் தலையிலிருக்கும் பூக்கள் தெரியாது போகலாம்
ஆகாயம் தெரியக்கூடும்
ஆகாயத்தில் பறக்கிற பறவைகளும் தெரியலாம் ஒருவேளை.
உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கின்ற
வருத்தத்தையறிந்த பறவைகளில் ஒன்று
கண்ணாடியின் அருகாமையில் முகம் தெரியப்
பறந்து கடக்கலாம் உன்னை.
வருத்தமற்ற முகத்தை
உடைந்த கண்ணாடித் துண்டில்
அப்பறவை வேறெங்கேனும் காணும்
அப்போது
ஜன்னலின் வழியே
பறவைகள் ஒவ்வொன்றும் விட்டுச் செல்லும்
ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாய்.
No comments:
Post a Comment