சில சமயங்களில் சிலரின் உயிரியல் கடிகாரம் சரிவர இயங்க முடியாமல் பழுதடைந்து விடுகிறது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் என்னதான் அசதியுடன் படுத்தாலும் உறங்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது அவர்கள் மனதில் நினைவலைகள் மீண்டும் மீண்டும் எழுந்து அவர்களின் மனக்கண் முன் உலவிக் கொண்டு இருக்கும். அப்படியே அவர்கள் உறங்கினாலும் சீக்கிரமே எழுந்து விடுவார்கள். அல்லது இரவில் ஆழ்ந்த உறக்கமின்றி இடையிடையே நிறையத் தடவைகள் விழித்தெழுந்து படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்கள். இதனால் காலையில் எழும்போது மனச்சோர்வுடனும் அசதியுடனும், தூக்கக் கலக்கத்துடனும் காணப்படுவார்கள். இந்நிலையைப் "போதிய உறக்கம் அற்ற நிலை' என்பார்கள்.
பகலில் ஏற்படும் மனஅழுத்தமும், மனக்குழப்பமும், மனக்கலக்கமும் இரவில் உறக்கத்தில் அச்சம் கலந்த கனவுகளாக வெளிப்படும். இவர்களின் இந்த திகில் கனவுகளில் யாரோ துரத்துவது போலவும், தப்பிக்க வழியின்றித் தலைதெறிக்க ஓடுவது போலவும், விபத்து ஏற்படுவது போலவும், மோசமான சிக்கலில் சிக்கி கொள்வது போலவும் காட்சிகள் விரியும். உடல் வியர்வையில் குளித்து, திகிலில் உறைந்து நடுநடுங்கி விழிப்பார்கள்.
பணியிடத்திலோ அல்லது இல்லத்திலோ அதிக மன வேதனையில் மூழ்கியதால், அதிகமாக சிகரெட் குடித்தல், அதிகமாக காப்பி, டீ அருந்துதல், மது மற்றும் போதைப் பொருட்கள் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் நெடுநேரம் தொலைக்காட்சி பார்த்தல் போன்றவை தூக்கத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் அதிக எடை, தூக்கத்தில் வலிப்பு, பலமான குறட்டை, தூக்கத்தில் விட்டு விட்டு மூச்சுவிடுதல் போன்றவைகளும் உறக்கத்தை கெடுத்துவிடும்.
தூக்கம் வருவது எப்படி?
நாம் படுத்த உடன், உடனே ஆழ்ந்த தூக்கத்திற்குப் போய் விடுவதில்லை. கண்களை மூடியதும், தூக்கம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் தழுவுகிறது. கண்கள் செருகி, தூங்கத் துவங்கியதும், வெளிவிஷயங்கள் தெரிவதில்லை, இதுதான் நமது தூக்கத்தின் முதல்நிலை. இந்நிலையில், மூளையில் "பீட்டா' மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 14 சைக்கிள்கள்.
மூளை இயங்கும்போது அதிலிருந்து பல்வேறு மின்னலைகள் தோன்றுகின்றன. இதை E.E.G என்ற கருவியின் மூலம் அளக்க முடியும். இக்கருவி மூளையின் செயல் பாட்டை ஒரு விநாடிக்கு இத்தனை சைக்கிள் வேகத்தில் இயங்குகிறது என்று காண்பிக்கும்.
பின்பு, சிறிது நேரத்தில் நாம் சலனமின்றி, ஆழ்ந்த உறக்கத்திற்குப் போய்விடுவோம். இந்நிலையில், கண்ணிமைகள் மூடி இருந்தாலும் நம் விழிகள் பக்கவாட்டில் உருளும்.இவ்வகை உறக்கத்தில்தான் மூளையில் "ஆல்ஃபா' என்ற மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 7லிருந்த 14 சைக்கிள்கள். இம்மின்னலைகள் நமது உடலின் களைப்பை போக்க உதவுகிறது; உள்ளம் புத்துணர்ச்சி பெற பயன்படுகிறது. ஒருவனை "அறிதுயிலில்' (Hypnotism) ஆழ்த்தும் போது அவன் மூளையில் "ஆல்ஃபா' மின்னலைகள் உற்பத்தியாகின்றன.
அதேபோல் ஒருவன் தியானத்தில் ஈடுபடும் பொழுது அவனது மூளையில் "ஆல்ஃபா' மின்னலைகள் உற்பத்தியாகின்றன. இந்த இரண்டாம் நிலைத் தூக்கத்தில்தான் கனவுகள் ஏற்படுகின்றன.பின் நாம் தூக்கத்தின் மூன்றாம் நிலைக்குச் செல்கிறோம். இந்த மூன்றாம் நிலைத் தூக்கத்திலும் கூட நமது விழிகள் இலேசாக உருளும். இவ்வகை உறக்கத்தின்போது மூளையில் "தீட்டா' மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 4 முதல் 7 சைக்கிள்கள் வரை. இந்நிலையில் நீங்கள் சற்று ஆழ்ந்து உறங்குவீர்கள்.
இந்த மூன்று நிலைகளைக் கடந்த பின், உறக்கம் மிக மிக ஆழமாக ஏற்படுகிறது. இந்த மிக ஆழ்நிலை உறக்கத்தில்தான் மூளையில் "டெல்ட்டா' என்ற மின்னலைகள் தோன்றுகின்றன. இம்மின்னலையின் வேகம் விநாடிக்கு 1 முதல் 4 சைக்கிள்கள் வரை ஆகும். இம்மின் அலைதான் நமது மூளையை என்றும் இளமையாகச் செயல்பட வைக்கிறது. இந்நிலையைத் தவிர, நமது மூளை உணர்வற்றுவிடுகிற, " உணர்வற்ற நிலை' (COMA) என்ற நிலையும் உள்ளது. இந்நிலையில், நமது மூளையில் எவ்வித மின் அலையும் தோன்று வதில்லை. இந்நிலையில் மூளையின் செயல்பாடு வெறும் சைபர் (Zero) தான்!
No comments:
Post a Comment